ஹைதராபாத் நகரின் அல்வால் பகுதியில் பள்ளி மாணவிகளான 3 சிறுமிகள் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளும் 9-ஆம் வகுப்பு படித்து வருபவர்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பின்னர், சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் உண்மையை தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி, “தசரா விழாவை பள்ளியில் கொண்டாடப் போகிறோம்” என்று பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமிகள், அதன்பின் காணாமல் போயுள்ளனர். பின்னர், பெற்றோர்கள் போலீசில் புகாரளித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், மது (19), வம்சி அரவிந்த் (22), நீரஜ் (21) ஆகிய மூன்று இளைஞர்களும், சிறுமிகளை அழைத்துச் செல்வதாக நம்பிக்கை கொடுத்துள்ளனர். முதலில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவளித்த அவர்கள், பின்னர் அங்கிருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில் உள்ள யாதகிரிகுட்டா நகரத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, ஒரு உள்ளூர் லாட்ஜில் 3 தனித்தனி அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, அந்த அறைகளில் வைத்துச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மறுநாள், அந்த சிறுமிகள் ஹைதராபாத்தின் தர்னாகா பகுதியில் இறக்கிவிடப்பட்டனர்.
ஆரம்பத்தில் பயத்தின் காரணமாக நடந்தவற்றை யாரிடமும் கூறாமல் இருந்த சிறுமிகள், பின்னர் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, பெற்றோர் உடனடியாக அல்வால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுமிகள் மருத்துவப் பரிசோதனைக்காக காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 3 இளைஞர்களுடன் சேர்ந்து, குற்றம் நடந்த லாட்ஜின் மேலாளரான சோமேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது 4 பேரும் காவலில் வைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! கனமழை வெளுத்து வாங்கும்..!! மீனவர்களுக்கு வார்னிங்..!!