திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வாசுதேவன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமாரி. இவர் தெரிந்தவர்களுக்கு மட்டும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார். அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவருக்கு ரூ.2 லட்சம் வட்டிக்கு கொடுத்திருந்தார். ஆனால், சம்பத் பணத்தை திரும்பக் கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த நிலையில், காலதாமதமாக சிறுக சிறுக அசல் தொகையை மட்டும் முழுமையாக கட்டி முடித்துள்ளார்.
அசல் தொகையைப் பெற்ற குமாரி, சம்பத்தை தன் வீட்டிற்கு அழைத்து வட்டிப் பணத்தைக் கேட்டுள்ளார். அசல் தொகையை விட வட்டி அதிகமாகிவிட்டதால், தன்னால் வட்டியை செலுத்த முடியாது என்று சம்பத் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சம்பத், மூதாட்டியின் வீட்டு வாசற்படியில் கிடந்த கருங்கல்லை எடுத்து குமாரியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த குமாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூதாட்டி உயிரிழந்ததை அறிந்த சம்பத், உடனடியாக மூதாட்டியின் கை, கால்களை கட்டி, அவரது உடலை ஒரு சாக்கு மூட்டையில் போட்டுள்ளார். பின்னர், நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் அந்த மூட்டையை அருகில் உள்ள கிணற்றில் தூக்கி வீசியுள்ளார். பின்னர், சில தினங்களுக்கு பிறகு, கிணற்றில் சடலம் மிதந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட அப்பகுதி மக்கள், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில், ஊர் மக்களோடு சேர்ந்து நின்ற சம்பத், எதுவும் தெரியாதவர் போல வேடிக்கை பார்த்துள்ளார்.
ஆனால், போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், சம்பத் தான் மூதாட்டியை கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது. இதையடுத்து, கொலை செய்த சம்பத்தை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.