சொந்த வீடு என்ற கனவு பலருக்கும் நிறைவேறாத ஆசையாகவே நீடிக்கிறது. இந்த கனவு விரைவில் நனவாக வேண்டும் என்று விரும்புபவர்கள், முருகப்பெருமானை நம்பிக்கையுடன் வழிபடுவது சிறந்த பலனை அளிக்கும். முருகனின் அருளால் நிச்சயம் சொந்த வீடு அமையும் என்று நம்பப்படுகிறது.
முருகன் பரிகாரம் : சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் கொண்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். கூட்டம் குறைவாக உள்ள ஒரு நாளை தேர்ந்தெடுத்துச் செல்லலாம். குறிப்பிட்ட கிழமையில்தான் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை இல்லை.
தாமரை மாலை சாற்றுதல் : திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு உங்கள் கையால் தாமரை மாலை வாங்கிச் சாற்றுங்கள். வசதி குறைவாக இருப்பவர்கள் 1 அல்லது 3 தாமரை மலர்களை வாங்கிச் சமர்ப்பிப்பதும் சிறப்பானது. தாமரை மலர் சுக்கிர பகவானின் அம்சத்தை கொண்டது. சொந்த வீடு அமையப் பலம் தேவைப்படும் செவ்வாய் பகவானுக்கு அதிதேவதை முருகனே ஆவார்.
மேலும், குரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், குருவின் ஆசீர்வாதமும் கிடைப்பதால், வீடு கட்டத் தேவையான அனைத்து நல்ல அம்சங்களும் இதில் அடங்கி விடுகின்றன. திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு தாமரை மலர் சாத்தி, அங்குள்ள குரு பகவானுக்கு சந்தன காப்பு சாத்தி வழிபட்டால், நிச்சயமாக சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும்.
கடல் மண் வழிபாடு : திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ள கடலுக்கு சக்தி அதிகம் என்று நம்பப்படுகிறது. நீங்கள் கடலில் கால் நனைத்தோ அல்லது நீராடியோவிட்டு, கடல் அலை வந்து போன இடத்தில் உள்ள மண்ணை கொஞ்சமாக எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.
மேலும், வீட்டிற்கு கொண்டு வந்த மணலை, ஈரப்பதம் நீங்கும் வரை மட்டும் கொஞ்ச நேரம் உலர வைத்துக்கொள்ளவும். பின்னர், அந்த மணலை மீண்டும் மஞ்சள் துணியில் கட்டி, பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வாரத்தில் ஒருநாள், குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று அந்த மண்ணுக்கு பூக்கள் சாத்தி, சாம்பிராணி தூபம் காட்டி, விரைவில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதால், உங்கள் ஆசை சீக்கிரம் நிறைவேறும்.
உங்களால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், யாராவது ஒருவரை இந்த கடல் மண்ணை அலை அடித்த பிறகு அந்த இடத்தில் இருந்து எடுத்து வரச் சொல்லலாம். சொந்த வீடு கட்ட முருகனை மையமாக கொண்ட பல பரிகாரங்கள் இருந்தாலும், இந்த கடல் மண் பரிகாரம் கூடிய விரைவில் நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது.
Read More : 1100 ஆண்டுகள் பழமையான உலகின் முதல் கருடாழ்வார் கோவில்.. எங்க இருக்கு தெரியுமா..?