மத்திய அரசு தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் செப்.3ஆம் தேதி நடத்திய 56-வது கூட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது. வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டதால், கடந்த 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த மாற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் கார்கள் வரை அவற்றின் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளன. இந்த விலை குறைப்பின் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார் விற்பனையில் மாருதி சுசுகியின் பிரம்மாண்ட சாதனை :
பட்ஜெட் மாடல் கார்கள் ரூ.40,000 முதல் ரூ.75,000 வரையிலும், நடுத்தர செடான் கார்கள் ரூ.57,000 முதல் ரூ.80,000 வரையிலும், எஸ்யூவி கார்கள் ரூ.68,000 முதல் ரூ.85,000 வரையிலும் விலை சரிந்துள்ளன. இதனால், கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்திலேயே பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மாருதி சுசுகி நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரக் கவர்ச்சிகரமான மாதத் தவணைத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி சாமானியர்களும் மாதம் ரூ.1,999 செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
EMI திட்டம் :
திருத்தப்பட்ட ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே மாருதி நிறுவனம் 25,000 கார்களை டெலிவரி செய்து, தனது 35 ஆண்டு கால சாதனையை முறியடித்தது. மேலும், நவராத்திரி பண்டிகை தொடங்கிய முதல் 4 நாட்களில் மட்டும் சுமார் 80,000 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இது குறித்து மாருதி சுசுகியின் தலைமைச் செயல் அதிகாரி பார்த்தே பானர்ஜி கூறுகையில், “திருத்தப்பட்ட ஜிஎஸ்டி-க்குப் பின் சிறிய கார்களுக்கு 100% விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 1,000 பேருக்கு 34 பேர் மட்டுமே கார் வைத்துள்ளனர். அனைவரும் கார் வாங்குவதை எளிதாக்க, மாதம் ரூ.1,999-க்கு EMI செலுத்தும் வகையில் கடன் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார். உலகளவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் மாருதி சுசுகி 8-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read More : உங்கள் கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதா..? இனி கவலை வேண்டாம்..!! உடனே இந்த விஷயத்தை பண்ணுங்க..!!



