மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்த 35 வயதான சதீஸ்குமார், அதே பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். சதீஸ்குமாருக்கு திருமணமாகி 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவருடைய மகளும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சதீஸ்குமார் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் தனது மகளைப் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது, அவரது தோழியான அந்த சிறுமியையும் அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால், மகளின் தோழி அடிக்கடி சதீஸ்குமாரின் வீட்டிற்கு வந்து விளையாடி உள்ளார். ஆனால், இதை சதீஸ்குமார் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்.
சம்பவத்தன்று, சிறுமி சதீஸ்குமாரின் வீட்டிற்கு அவரது மகளுடன் விளையாட சென்றபோது, வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள் இல்லாத சூழலை பயன்படுத்திக் கொண்டு, சதீஸ்குமார் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இது குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால், கொன்றுவிடுவதாக அவர் கடுமையாக மிரட்டியுள்ளார். இதனால், பயத்தில் இதை யாரிடமும் சொல்லாமல் இருந்த சிறுமியின் நிலையை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சதீஸ்குமார், தொடர்ந்து சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக 13 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது, அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது, சதீஸ்குமார் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், 3 பிரிவுகளின் கீழ் சதீஸ்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் குறித்து தெரிந்து தப்பி ஓடிய சதீஸ்குமாரை, உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். தனது மகளின் தோழியான பள்ளிச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இந்த சம்பவம், உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Read More : கரூர் சம்பவம் எதிரொலி..!! தலைமறைவான தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!! வலைவீசி தேடும் போலீஸ்..?



