கரூர் சம்பவத்திற்கான காரணத்தை விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க ஜெ.பி.நட்டா தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில், கடந்த இரண்டு வாரங்களாக மாவட்டம் வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.
அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கரூரில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் உடனடியாக கரூர் செல்ல உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் NDA எம்பிக்கள் குழு கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்..? கரூரில் நடந்தது என்ன.? என்ற விவரங்களை கட்சிக்கு அறிக்கையாக சமர்பிப்பர். ஆனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, ரேகா ஷர்மா உள்ளிட்ட 8 எம் பிக்கள் இந்த குழுவில் உள்ளனர்.



