சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர் தனது மனைவி பிங்கி (36) உடன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இரண்டாவது மனைவியான பிங்கி, பிரகலாத் சர்தார் உடன் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பப்லு என்பவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று பொருட்களை வாங்கி வருவதை கணவர் பிரகலாத் சர்தார் பலமுறை கண்டித்தும், இந்தப் பழக்கம் தொடர்ந்த நிலையில், சமயம் கிடைத்தபோது இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, பிரகலாத் சர்தார் மீண்டும் மனைவியிடம் பப்லுவுடன் பழகுவது குறித்து கண்டித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றிய நிலையில், குடிபோதையில் இருந்த பிரகலாத் சர்தார், தனது மனைவியான பிங்கியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றார்.
ஆனால், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக, கணவரை பலமாக தாக்கி, அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் அவரது கழுத்தில் குத்தியுள்ளார் மனைவி. இதில் வலி தாங்க முடியாமல் பிரகலாத் சர்தார் கத்தியுள்ளார். அப்போது, அருகில் இருந்த பப்லு ஓடி வந்து, உயிருக்குப் போராடிய பிரகலாத் சர்தாரை மீட்டு, சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.
பின்னர், வீட்டுக்குத் திரும்பிய பிரகலாத் சர்தார் மாத்திரை போட்டுத் தூங்கியுள்ளார். அப்போது, கத்தியால் குத்தப்பட்ட கழுத்து பகுதியில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதைக் கண்ட பிங்கியும், பப்லுவும் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்தபோது, பிரகலாத் சர்தார் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
இது குறித்துக் குமரன் நகர் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக, மனைவி பிங்கியைக் கைது செய்தனர். மேலும், கட்டிட ஒப்பந்ததாரர் விவேக் மற்றும் மேற்பார்வையாளர் ரகுநாத் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : கார் ரேஸில் மீண்டும் மிரட்டிய அஜித்..!! ஸ்பெயின் பந்தயத்தில் ஏ.கே. ரேசிங் அணி சாதனை..!!