40 வயதை கடந்தவர்கள் ஆரோக்கியமான வாழ்வைப் பின்பற்ற, உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரபல சித்த மருத்துவர் சிவராமன் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், 40 வயதிற்கு மேற்பட்டோரின் முதல் மற்றும் முக்கியமான எதிரியாக கருத வேண்டியது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்கள் தான். முன்பு கொழுப்பு தான் உடல்நலப் பிரச்சனைக்கு காரணம் என்று நம்பப்பட்டாலும், தற்போது உலகளாவிய மருத்துவர்கள் கார்போஹைட்ரேட் அதிகப்படியான நுகர்வுதான் பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகளுக்கு அடிப்படை” என்று கூறுகின்றனர்.
காலை மற்றும் இரவு என்ன சாப்பிடலாம்..?
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக மாவுச்சத்து நிறைந்த காலை உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக இட்லிகள், பொங்கல், வடை போன்ற எளிதில் உடையும் மாவுச்சத்து மிகுந்த உணவுகளை குறைப்பது அவசியம். அதற்கு மாறாக, முளைகட்டிய பயிறு வகைகள், முட்டை, ஆம்லெட், பன்னீர், மற்றும் பாதாம் பருப்பு போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகரிக்க வேண்டும். மேலும், கடலை மிட்டாய் (எள்/வெல்லம் சேர்க்கப்பட்டது) ஒரு சிறந்த புரத மற்றும் ஆற்றல் மூலமாகும். ஆனால், இதை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
அதேபோல், இரவு உணவில் செய்யும் தவறுகளே பல உடல்நலக்குறைவுகளுக்கு காரணம். குறிப்பாக, இரவு 10 மணிக்கு மேல் நடைபெறும் விருந்துகள் மற்றும் 18 வகை உணவுகள் பரிமாறப்படும் திருமண வரவேற்பு விருந்துகளை தவிர்ப்பது நல்லது. சப்பாத்தியுடன் அதிக எண்ணெய் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்க்கப்பட்ட குருமா அல்லது கிரேவி வகைகளையும் தவிர்க்க வேண்டும். சிறந்த இரவு உணவாக, மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோதுமை ரவை கிச்சடி அல்லது சிறுதானியத்தில் செய்யப்பட்ட அடை போன்ற எளிமையான உணவுகளை முடித்துக் கொள்வது நல்லது.
சாதம், சிறுதானியங்கள் :
அரிசி சோற்றை மிகக் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பாரம்பரிய அல்லது சிறு தானிய அரிசிகளை பயன்படுத்துவது நல்லது. அத்துடன், அதிக அளவில் காய்கறிகள், கீரைகள், கூட்டு, பொரியல் மற்றும் பச்சடிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், புரதத்திற்காக நிறைய மீன் துண்டுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
குறைந்த கார்போஹைட்ரேட், அதிக நார்ச்சத்து மற்றும் குறைவான கொழுப்பு நிறைந்த உணவுதான் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு சிறந்தது. தீட்டப்பட்ட வெள்ளை அரிசியின் மாவுச்சத்து உமிழ்நீரால் வேகமாக உடைக்கப்பட்டு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக கலக்கிறது. ஆனால், கம்பு, வரகு போன்ற சிறுதானியங்கள் மெதுவாக உடைவதால், குளுக்கோஸ் ரத்தத்தில் வேகமாக உறிஞ்சப்படுவது குறைகிறது.
அரிசிகளில் கவுனி அரிசி தான் மற்ற அரிசிகளை விட ரத்தத்தில் சர்க்கரையாக கலக்கும் வேகம் குறைவாக உள்ளது. மொத்தத்தில், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை வேகமாக ரத்தத்தில் கலக்காத உணவுகளைத் தேர்ந்தெடுத்து, புரதச்சத்தை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் போன்ற பல நோய்களைத் தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : தீபாவளி அதிரடி ஆஃபர்..!! இந்த கடையில் பாதி விலையில் பட்டுப்புடவைகள் வாங்கலாம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?