மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின்படி, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு, மற்ற பொருட்களுக்கு 2 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரு அடுக்குகளில் மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அதிக ஆடம்பரப் பொருட்களுக்கு 40 சதவீத வரி தொடரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வரி குறைப்பின் பலனாக, ஆவின் பொருட்களின் ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டு அவற்றின் விலையும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆவின் நிறுவனத்தின் நெய் மற்றும் வெண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டதால், ஒரு கிலோ நெய்யின் விலை ரூ.40 முதல் ரூ.50 வரை சரிந்துள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் நெய் உள்ளிட்ட பொருட்களை மக்கள் மகிழ்ச்சியுடன் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து மயிலாடுதுறையில் உள்ள ஆவின் விற்பனை நிலையமான ஸ்ரீ பெரிய நாயகி ஏஜென்சியின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “அரசு 7% ஜிஎஸ்டி வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு முழுமையாக வழங்கியுள்ளது. சென்ற வாரம் வரை ரூ.700-க்கு விற்கப்பட்ட நெய்யின் விலை, தற்போது 7% வரி குறைக்கப்பட்டு ரூ.660-க்கு விற்கப்படுகிறது.
விலை குறைந்ததால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன், ஆர்வமாக நெய் உள்ளிட்ட ஆவின் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஒரு லிட்டர் நெய் ரூ.660-க்கும், அரை லிட்டர் நெய் ரூ.345-க்கும், வெண்ணெய் ரூ.265-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இந்த விலை குறைப்பு மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.