புற்றுநோய் குறித்த பாதிப்புகள் ஆங்காங்கே கேள்விப்பட்ட நிலை மாறி, தற்போது நாடு முழுவதும் புற்றீசல் போல அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்த அபாயகரமான நிலையை உறுதிப்படுத்தும் வகையில், சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை, இந்தியா உட்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த ஆய்வின்படி, உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்புகள் 75% அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சுமார் 3 கோடியே 5 லட்சம் பேருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், ஒரு கோடியே 86 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1990 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26.4% அதிகரித்துள்ளது. இது கவலைக்குரிய விஷயமாகும். மாறாக, இதே காலகட்டத்தில் அண்டை நாடான சீனாவில் பாதிப்பு 18.5% குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1990-ல் ஒரு லட்சத்தில் 84 பேருக்கு இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2023ல் ஒரு லட்சத்தில் 107 பேராக உயர்ந்துள்ளது. அதேபோல், இறப்பு விகிதமும் அதிகரித்து, 2023 ஆம் ஆண்டில் மட்டும் 12.1 லட்சம் உயிரிழப்புகளுக்குப் புற்றுநோய் காரணமாக அமைந்தது.
வாழ்க்கை முறை :
உலகளவில் 40% க்கும் அதிகமான புற்றுநோய் இறப்புகளுக்கு, புகையிலை பயன்பாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்ற வாழ்க்கை முறை காரணிகளே முக்கிய பங்காற்றுகின்றன என்று ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான டாக்டர் லிசா ஃபோர்ஸ் கருத்து தெரிவிக்கையில், உலக சுகாதாரத்தில் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்கும், செயல்பாட்டிற்கும் குறைவான முன்னுரிமையே வழங்கப்படுவதாக கவலை தெரிவித்தார்.
பல நாடுகளில் இந்த சவாலை எதிர்கொள்ளப் போதுமான நிதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வளங்கள் குறைவாக உள்ள நாடுகளில் புற்றுநோய் சுமையின் அதிகரிப்பை தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



