ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் மீண்டும் ஒரு பிரம்மாண்ட இந்திய படைப்பாக வெளியாகி, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. முதல் பாகமான ‘காந்தாரா’ ஏற்படுத்திய தாக்கத்தை விட பல மடங்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பும், அதில் இருந்த தெய்வீகத் தன்மையைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது.
கதைக்களம் :
‘காந்தாரா சாப்டர் 1’-இன் கதை, பஞ்சுருளி வேடமிட்டு ஆடிய தனது அப்பா ஏன் திடீரென மறைந்தார் என சிறுவன் கேட்கும் இடத்தில் இருந்து ஆரம்பித்து, முதல் பாகத்துடன் மிக அழகாக இணைப்பை உருவாக்குகிறது. பின்னர், புராண காலத்திற்கு கதை பயணிக்கிறது. காந்தாரா மக்கள் கார்னிகா கல்லை வழிபடுவதைப் பார்க்கும் அரசன், அதனுடன் இணைந்திருக்கும் ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைய ஆசைப்படுகிறான். அவன் காட்டுக்குள் நுழைய, அங்குள்ள மாய சக்தி அரசனையும் அவனது படை வீரர்களையும் அழிக்கிறது. அரசனின் வாரிசு மட்டும் உயிர் தப்பிவிடுகிறான்.
அரசனாக வளரும் ராஜா விஜயேந்திரன் (ஜெயராம்), ஒரு மகன் மற்றும் ஒரு மகளைப் பெறுகிறான். காந்தாரா பக்கம் பிரம்மராட்சதர்கள் இருப்பதாக நம்பி யாரும் அந்தப் பக்கம் செல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். தான் நல்ல நிலையில் இருக்கும்போதே தனது மகன் குலசேகரனுக்கு (குல்ஷன் தேவைய்யா) மன்னர் முடி சூட்டுகிறான். தாத்தாவின் கதைகளைக் கேட்டு வளர்ந்த குலசேகரன், முடி சூடிய உடனேயே வேட்டைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு காந்தாரா காட்டுக்குள் நுழைய, அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் அவர்களை பிரம்மராட்சசர்கள் போல வேட்டையாடித் துரத்துகிறார்கள்.
அவர்கள் கைது செய்த ஒரு போர் வீரனை வைத்துக்கொண்டு, கதாநாயகன் பெர்மி (ரிஷப் ஷெட்டி) நாட்டுக்குள் வர, அங்கே இளவரசி கனகவதியை (ருக்மணி வசந்த்) சந்திக்கிறான். காந்தாரா ஆட்கள் ஊருக்குள் வந்துவிட்டதை அறிந்த குலசேகரன் தனது படையுடன் காட்டுக்குள் சென்று அவர்களை அழிக்க முனைகிறான். இந்தச் சூழலில், ஹீரோ தெய்வ சக்தியின் துணையோடு அரசனை எதிர்த்தாரா? ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா? காந்தாராவை காவல் காக்கும் கடவுளுக்கும் தீய சக்திக்கும் இடையேயான போர் எப்படி முடிந்தது? என்பதே இந்தப் படத்தின் விறுவிறுப்பான கதை.
திரைக்கதை மற்றும் நடிகர்களின் பங்களிப்பு :
படம் ஆரம்பித்தது முதல் ஆக்ஷன் காட்சிகளிலும், கேமரா மற்றும் ஸ்டன்ட் காட்சிகளிலும் கண் சிமிட்ட அவகாசம் இல்லாமல் அனல் பறக்கிறது. ரிஷப் ஷெட்டி ஊருக்குள் வந்து ஹீரோயினைச் சந்திக்கும் தேர் காட்சி மற்றும் அதே பாணியில் வரும் குதிரைச் சண்டைக் காட்சி ஆகியவை சிறப்பு. காந்தாரா காட்டை பார்த்து பயப்படும் ஜெயராம், கிளைமேக்ஸில் எடுக்கும் அவதாரம் யாருமே எதிர்பாராத திருப்பத்தை அளிக்கிறது.
படத்தின் முதல் பாதியில் இடம்பெறும் சில நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குலசேகரனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவைய்யாவின் நடிப்பு மற்றும் இளவரசியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்தின் பங்களிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. கடவுள் தங்கள் மக்களைக் காப்பார் என்று காந்தாரா மக்கள் நம்புவதும், வஞ்சகம் செய்து அந்தக் கடவுளின் சக்தியைச் சிறைபிடித்துப் பிரம்மாண்ட கோயில் கட்ட அரசாங்கத்தில் இருப்பவர்கள் செய்யும் சூழ்ச்சிகளும் என, கடைசிவரை ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது திரைக்கதை.
மொத்தத்தில், ‘காந்தாரா சாப்டர் 1’ ஒரு பிரம்மாண்டமான படைப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படமாகும். அடுத்த பாகத்திற்கான லீட் கொடுத்திருக்கும் விதமும் அட்டகாசமாக உள்ளது. ரிஷப் ஷெட்டியின் உழைப்பால், இந்தத் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் பட்டியலில் இணையும் என்பதில் சந்தேகமில்லை.