சென்னை சூளைநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் செய்வதற்காக பெற்றோர் ஒரு மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்தத் தளத்தின் மூலம் சூர்யா என்ற இளைஞர் அந்த செவிலியரை தொடர்புகொண்டுள்ளார்.
பின்னர், நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி கோயம்பேடுக்கு வரவழைத்த சூர்யா, எடுத்த எடுப்பிலேயே ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்து அந்தப் பெண்ணை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, இருவரும் அடிக்கடி சந்தித்துப் பழகிய நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நம்ப வைத்து, நெருங்கிப் பழகியுள்ளனர்.
சில நாட்களுக்குப் பிறகு, சூர்யா அந்த செவிலியரிடம், “திருமணத்திற்குப் பிறகு சென்னையில் சொந்த வீட்டில் குடியேற வேண்டும். என்னிடம் ரூ.40 லட்சம் உள்ளது, இன்னும் ரூ.10 லட்சம் இருந்தால் கடனில்லாமல் வீட்டை வாங்கிவிடலாம்” என்று கூறியுள்ளார். சூர்யாவை முழுமையாக நம்பிய அந்தப் பெண், தனது சேமிப்புப் பணம், 8 சவரன் நகை, அத்துடன் வங்கியில் கடன் பெற்று வாங்கிய ரூ.8.7 லட்சம் என அனைத்தையும் அவரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, பணம் மற்றும் நகைகளை மொத்தமாகப் பெற்றுக்கொண்ட சூர்யா, அதன் பிறகு திருமணப் பேச்சைத் தவிர்க்கத் தொடங்கினார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செவிலியர், நேரடியாக சூர்யாவிடம் முறையிட்டபோது, “நீயும் நானும் ஹோட்டலில் நெருக்கமாக இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
பின்னர், தனது செல்போனை அணைத்துவிட்டு சூர்யா தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த செவிலியர், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து, தன்னுடன் உடலுறவு கொண்டுவிட்டு, இளைஞர் தலைமறைவாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
செவிலியரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சூர்யாவை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், சூர்யாவின் கார் நெல்லை மாவட்ட சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் சிசிடிவி ஆதாரம் தனிப்படை போலீசாருக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில், 15 நாட்கள் நெல்லையிலேயே முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், இறுதியாக 25 வயது சூர்யாவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சூர்யாவை சென்னைக்கு அழைத்து வந்தபோது, அமைந்தகரை கூவம் ஆற்றின் அருகே அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில், சூர்யாவின் இடது கால் முறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் அதிர்ச்சி :
கைது செய்யப்பட்ட சூர்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இந்த செவிலியர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அனைத்து பெண்களையும் இதேபோல மேட்ரிமோனியல் மூலம் வலை விரித்துத் திருமணம் செய்வதாக நம்ப வைத்து, நெருங்கி பழகுவார். அவர்களது நம்பிக்கையைப் பெற்றதும் உடலுறவு வைத்துக் கொள்வார். இறுதியில், செல்போனை அணைத்துவிட்டு ஊரை மாற்றித் தலைமறைவாகிவிடுவார். இந்த 50 பெண்களையும் ஏமாற்றி பண மோசடியும் செய்துள்ளார் சூர்யா.
சூர்யா தனது காரில் “SPCL Secretary International Human Rights & Crime Control Council” என்ற பெயரில் சிகப்பு நிற போர்டை வைத்துக்கொண்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகப் பெண்களிடம் கூறி நம்பவைத்துள்ளார். இந்தப் போர்டு இருந்தால், பெண்கள் தன்னை எளிதில் நம்பிவிடுவார்கள் என்றும் அவர் கணக்குப் போட்டுள்ளார். இத்தனைக்கும், சூர்யாவின் தந்தை மத்திய உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.