கடந்த மார்ச் மாதம் முதல் விஜய்க்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோ பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது. இதில் 8 முதல் 11 பேர் வரை துப்பாக்கியுடன் ஆயுதமணிந்து, சுழற்சி முறையில் விஜயின் சுற்றுப்பயணங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் நிழல் போல பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் சமீபத்தில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்குப் பிறகு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல்குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் மதியழகன் கைது செய்யப்பட்டார். மற்ற இருவர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள், கூட்டத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், காவல்துறை தடியடி நடத்தியதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் நெரிசல் ஏற்பட்டதாகவும், மேலும் விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் பெரும் குறைபாடு உள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டுள்ளார். விஜய்க்கு அளிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறையில் குறைபாடுகள் உள்ளனவா என்பதை விளக்கமாக பாதுகாப்பு படையினரிடம் கேட்டுள்ளார். மேலும், விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விரைவில் ஒய் பிரிவிலிருந்து இசட் பிரிவுக்கு உயர்த்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.