கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று வால்பாறைக்கு அருகில் உள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் கருமலை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நேரத்தில், கருமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி மற்றும் அவரது மகள் பிந்து ஆகிய இருவரும், வேளாங்கண்ணி மாதா தேவாலயம் அருகே ஓடும் கருமலை ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள ஒரு பாறையின் மீது நின்று துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென உருவான காட்டாற்று வெள்ளம் அவர்களைச் சூழ்ந்ததால், அதிர்ச்சியடைந்த தாய்-மகள் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் தப்பிக்க, அந்தப் பாறையின் மீது ஏறி நின்று உதவிக் கேட்டனர்.
சுமார் அரை மணி நேரமாக அவர்கள் வெள்ளத்தின் நடுவே தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், மாதா தேவாலயத்தில் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதே சமயம், தேவாலயத்தில் இருந்த பெரிய கயிற்றை எடுத்துக்கொண்டு வந்த பொதுமக்கள், அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளின் உதவியுடன் அந்தக் கயிற்றை வெள்ளத்தின் நடுவில் பாறை மீது நின்ற தாய்-மகளை நோக்கி வீசினர். அவர்கள் இருவரும் கயிற்றைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டதை உறுதி செய்த பின், சில இளைஞர்கள் ஆற்றில் இறங்கி மெதுவாக அவர்களைக் கரைக்கு வரச்செய்து பத்திரமாக மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய தாய்-மகள் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த மீட்பு நடவடிக்கை அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More : பெரும் சோகம்..!! தூக்கி வீசிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்..!! துடிதுடித்து பலியான 4 சிறுவர்கள்..!!