தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய 3 இளைஞர்கள், அதிகாலை நடந்த கோர விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குருமூர்த்தி (21), ரஞ்சித் (18), பாரத் (18) ஆகிய மூன்று இளைஞர்களும் குலசேகரன்பட்டினம் கோவிலில் மாலை அணிந்து தசரா விரதத்தை மேற்கொண்டனர். திருவிழா முடிவடைந்த நிலையில், அதிகாலையில் அவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் தங்கள் சொந்த ஊரான விஜயாபதி அருகே உள்ள ஆவுடையாள்புரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தை குருமூர்த்தி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மணப்பாடு செல்லும் சாலை வளைவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக நாகர்கோவிலில் இருந்து வந்த அரசுப் பேருந்து மீது இவர்களின் பைக் மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் 3 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், பைக்கை ஓட்டிச் சென்ற குருமூர்த்தி மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பாரத் உடனடியாக மீட்கப்பட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த கோர விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் மற்றும் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், அவர்களின் குடும்பத்தினரையும் ஊரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.