கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாம் ஜார்ஜ் (59). இவருக்கும் இவரது மனைவி ஜெசி சாம் (49) என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு நிலவி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஜெசியின் சடலம் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஷாம் ஜார்ஜை போலீசார் கைது செய்து விசாரித்ததில், மனைவியைக் கொலை செய்து உடலை வீசிய உண்மையை அவர் ஒப்புக்கொண்டார்.
விசாரணையில், ஷாம் ஜார்ஜ், சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர், அவர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். ஷாம் ஜார்ஜ் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சுற்றுலா தொடர்பான படிப்பு படித்து வந்தபோது, அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதுவே கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். மேலும், ஷாம் ஜார்ஜுக்கு கோட்டயம், கோவா மற்றும் கோவளத்தில் கணிசமான சொத்துக்கள் இருந்ததால், சொத்துப் பிரிவினை தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
வெளிநாட்டில் வசிக்கும் மகள், தனது தாய்க்கு பலமுறை போன் செய்தும் தொடர்பு கொள்ள முடியாததால் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஷாம் ஜார்ஜ் வீட்டுக்குச் சென்றபோது, கணவன் மனைவி இருவரும் இல்லாததைக் கண்டு சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், இடுக்கி மாவட்டம் உடும்பனூர் அருகே 50 அடி பள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் உடலை மீட்டபோது அது ஜெசிதான் என உறுதிப்படுத்தினர்.
கொலை அரங்கேறியது எப்படி..?
ஜெசியின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, தலைமறைவாக இருந்த ஷாம் ஜார்ஜை போலீசார் தேடிக் கைது செய்தனர். விசாரணையில், வீட்டில் தகராறு ஏற்பட்டபோது, சாம் ஜார்ஜ் ஜெசியின் முகத்தில் மிளகு ஸ்பிரே (Pepper Spray) அடித்ததாகவும், மயக்கமடைந்த அவரைப் படுக்கையறைக்கு கொண்டு சென்று துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். பின்னர், அன்றிரவே உடலை காரில் போட்டுப் பள்ளத்தாக்கில் வீசிவிட்டு மைசூருக்கு தப்பிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
ஷாம் ஜார்ஜுடன் கோட்டயம் பல்கலைக்கழகத்தில் நெருங்கிப் பழகிய ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அந்தப் பெண்ணையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.