கரூர் மாவட்டத்தில், தாயின் உடல்நலக் குறைவை சரிசெய்யப் பரிகாரம் செய்வதாகக் கூறி ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.5 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணின் தாயாருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் சக்திவேல் என்ற சாமியாரை அணுகியுள்ளார். அப்போது அந்த சாமியார், “தாயின் உடல்நலப் பாதிப்பு தீர சில முக்கிய பரிகாரங்கள் செய்ய வேண்டும், இதற்கு ரூ.10 லட்சம் செலவாகும்” என்று கூறியுள்ளார்.
தாயின் உடல்நலம் குறித்துக் கவலையில் இருந்த பிரவீனா, அதை நம்பி முதலில் சாமியார் சக்திவேலிடம் ரூ.5 லட்சம் முன்பணம் கொடுத்து பரிகாரங்களைத் தொடங்கச் சொல்லியுள்ளார். சக்திவேல் சில பரிகாரங்களை செய்த பின்னரும், பிரவீனாவின் தாயாரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த பிரவீனா, உடனடியாக சாமியாரிடம் சென்று தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், பணத்தைத் தர மறுத்த சக்திவேல், அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். இதையடுத்து, பிரவீனா உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போலிச் சாமியார் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற போலிச் சாமியார்கள் மற்றும் சடங்குகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும், உடல்நலப் பிரச்சனைகளுக்கு முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.