ஆரோக்கியமாக வாழ விரும்பும் நாம், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்துப் பரப்பப்படும் பல கட்டுக்கதைகளில் சிக்கிவிடுகிறோம். இந்தத் தவறான நம்பிக்கைகள், பல சமயங்களில் நமது ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கே ஆபத்தாக மாறிவிடுகின்றன. உடல் எடைக் குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை, மக்களிடையே நிலவும் 5 முக்கிய கட்டுக்கதைகளையும் அதற்கான உண்மைகளையும் இங்கே பார்க்கலாம்.
கட்டுக்கதை 1 : கொழுப்புச் சத்துதான் உங்களை எடை அதிகரிக்க செய்கிறது.
உண்மை : ஆரோக்கியமான கொழுப்புகள் (நட்ஸ், வெண்ணெய், நெய்/நல்லெண்ணெய்) ஹார்மோன் சமநிலை, வயிறு நிறைந்த உணர்வு (Satiety) மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் (A, D, E, K) உறிஞ்சப்படுவதற்கு மிகவும் அத்தியாவசியமானவை. மொத்தமாக கொழுப்பை தவிர்ப்பதைவிட, பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களை தவிர்த்து ஆரோக்கியமான கொழுப்பை மிதமாக சேர்ப்பதுதான் ஆரோக்கியமானது.
கட்டுக்கதை 2 : பழச்சாறு (Juicing) அருந்துவதுதான் ஊட்டச்சத்துக்களைப் பெற ஆரோக்கியமான வழி.
உண்மை : பழச்சாறுகள் தயாரிக்கும்போது, பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து நீக்கப்பட்டு விடுகிறது. நார்ச்சத்து நீக்கப்படுவதால், சர்க்கரை நேரடியாக ரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்தும். எனவே, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாறாக அருந்துவதைவிட, முழுமையாக சாப்பிடுவது செரிமானத்திற்கும், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கும் மிகச் சிறந்தது.
கட்டுக்கதை 3 : உப்பை தவிர்க்க வேண்டும்.
உண்மை : சோடியம் சத்து நமது நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு தாதுவாகும். இங்குள்ள பிரச்சனை, உப்பை முழுவதுமாக தவிர்ப்பதில் இல்லை. மாறாக, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை உப்பில் தான் உள்ளது. மிதமான அளவில் இயற்கையான உப்பைச் சேர்ப்பது உடலுக்குத் தேவை.
கட்டுக்கதை 4 : சில “சூப்பர்ஃபுட்கள்” மட்டும் அனைத்து நோய்களையும் குணப்படுத்திவிடும்.
உண்மை : எந்த ஒரு ஒற்றை உணவாலும் சமச்சீர் உணவுக்கு ஈடாக முடியாது. ஒரு “மந்திர” உணவில் மட்டுமே கவனம் செலுத்துவதைவிட, பலவகை உணவுகளை சேர்த்துக்கொள்வதும், அந்த உணவுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதும் தான் நீண்டகால ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.
கட்டுக்கதை 5 : முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் இரத்தக் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
உண்மை: உணவு மூலம் நாம் எடுத்துக்கொள்ளும் கொலஸ்ட்ரால் பெரும்பாலானவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவில் மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. முட்டைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை. எனவே, மஞ்சள் கருவோடு முட்டைகளை மிதமான அளவில் எடுத்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.