வங்கிச் சேவை முதல் அரசுத் துறைச் சேவைகள் வரை அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள ஆதார் அட்டையில், விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது உயர்த்தியுள்ளது.
இந்த உயர்வு ஒருபுறம் இருந்தாலும், 7 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்குப் பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொள்வதற்கான கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்து சலுகை அளித்துள்ளது. பயனர்கள் ஆதார் சேவை மையங்களில் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகளைப் புதுப்பிப்பதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
பயோமெட்ரிக் அப்டேட்டுக்கு முன்பு ரூ.100 இருந்த நிலையில், தற்போது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகிய சேவைகளுக்கான கட்டணம் ரூ.50-இல் இருந்து ரூ.75ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் 2028 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என்று UIDAI தெரிவித்துள்ளது.
சிறுவர்களுக்கு கட்டண விலக்கு :
இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு மத்தியில், 7 முதல் 15 வயதுடைய சிறுவர்களின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க செலுத்த வேண்டிய கட்டணத்தை UIDAI ரத்து செய்துள்ளது. இந்த சலுகை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை தொடரும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது. இது, வளரும் குழந்தைகளின் கட்டாயப் பயோமெட்ரிக் பதிவுகளை எளிதாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவாகப் பார்க்கப்படுகிறது.