இன்றைய காலகட்டத்திலும் வாழ்க்கை சூழ்நிலையிலும் ஒருவர் 60 அல்லது 70 வயதை கடந்தாலே ஆச்சரியமாக பார்க்கக் கூடிய நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் தங்களது நூறாவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கின்றனர். இந்த செய்தி தற்போது வைரலாகி இருக்கிறது.
இங்கிலாந்தின் சவுத் யார்க்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் பைக் கார்டு மற்றும் ஆனி பிரவுன் என்ற இந்த இரட்டை சகோதரிகள் தங்களது நூறாவது பிறந்தநாள் விழாவை பிரஸ் குடியிருப்பில் தங்களது குடும்பத்தாருடன் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் அவர்களது குடும்பத்தைச் சார்ந்த ஐந்து தலைமுறை சொந்தங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தங்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட ஆனி பிரவுன் சிறுவயதில் தங்கள் தந்தையால் கூட சகோதரிகள் இருவரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் இருவரும் அந்த அளவிற்கு ஒற்றுமையாக எப்போதும் ஒன்றாகவே இருப்போம் என தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு ஐம்பது வயதாகும் போது எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் இரவில் சீக்கிரமே உறங்கச் செல்ல வேண்டும் இது இரண்டும் தான் எங்களது இந்த நீண்ட ஆயுளுக்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஊர்ந்து கொண்டே இந்த 100 தொட்டு விட்டோம் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.