தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது வரை 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை. இத்திட்டத்தின் கீழ் விடுபட்டவர்கள் அல்லது புதிதாக தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிப்பதற்காக வரும் நவம்பர் மாதம் வரை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை விண்ணப்பித்தும் சேர்க்கப்படாமல் விடுபட்டவர்கள். அனைத்துத் தகுதிகளும் இருந்து புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள். சமீபத்தில் அரசு வழங்கிய விதிமுறைகள் தளர்வுகளின்படி புதிதாகத் தகுதி பெற்றிருப்பவர்கள். ஆகியோர் இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் தகுதி வாய்ந்த பயனர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றோ தவறான தகவல்களை கொடுப்பவர்கள், குடும்ப வருமானம் உள்ளிட்ட விவரங்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால், அவை உடனடியாக நிராகரிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவை மிகவும் முக்கியமான ஆவணங்களாகும். குறிப்பாக, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணையே விண்ணப்பத்தில் கொடுக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்று தவறாக இருந்தாலும் உரிமைத் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், பெண்கள் இவற்றைச் சரியாகக் கொடுத்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தனியாக வசிக்கும் பெண்களுக்குக் கிடைக்க வாய்ப்பு :
பொதுவாக குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) மூலம் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. ஆனால், ஒரு தனிக் குடும்பமாக வசிக்கும் பெண்ணுக்கு மகளிர் உரிமைத் தொகை கட்டாயம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படையான தேவை என்னவென்றால், அந்தப் பெண்ணிடம் தனியான ரேஷன் கார்டு இருக்க வேண்டும். இதுவரை தனியாக ரேஷன் கார்டு இல்லாதவர்கள், உடனடியாக “தனியாக வசிக்கிறேன்” என்பதற்கான மனுவை அளித்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது குறைதீர் முகாம்களில் நேரடியாக சென்றும் முறையிடலாம்.