விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தை சேர்ந்த சங்கர் (45) என்ற கூலித் தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, உயிருக்குப் போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான சங்கர், இருவேல்பட்டை சேர்ந்த அன்பு (எ) சரத்குமார் (39) என்பவருடன் நண்பராகப் பழகி வந்தார்.
இந்நிலையில், முந்தைய நாள் இரவு, சங்கர் தனது சொந்த ஊரான மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் தலை மற்றும் முகத்தில் ஆழமான ரத்தக் காயங்களுடனும், மர்ம உறுப்பில் அறுக்கப்பட்டும், வலது கண் தோண்டி எடுக்கப்பட்ட நிலையிலும் உயிருக்குப் போராடிக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சங்கருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரமே தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. போலீசார் அளித்த தகவல்படி, சங்கர் தனது மனைவி அஞ்சுலட்சத்தை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மரகதபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
இந்த அறிமுகத்தின் மூலம், சங்கரின் நண்பரான அன்பு (எ) சரத்குமாரும் அந்தப் பெண்ணுடன் பழகி, பின் அவரும் கள்ளக்காதல் உறவைத் தொடங்கியுள்ளார். அன்புவின் வருகைக்குப் பிறகு, அந்தப் பெண் சங்கரைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், தனது முன்னாள் கள்ளக்காதலிக்கு பல தொல்லைகளை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண் இந்த தொந்தரவுகளை அன்புவிடம் கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு, அன்பு (எ) சரத்குமார், இந்த விவகாரம் குறித்து சங்கரிடம் மதுபோதையில் கேட்டபோது இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் தான், அன்பு இந்த கொடூர தாக்குதலை சங்கர் மீது நடத்தியதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. சங்கரின் மனைவி அஞ்சுலட்சம் அளித்த புகாரின் பேரில், அன்பு (எ) சரத்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கள்ளக்காதல் சர்ச்சையில் சிக்கியுள்ள அந்தப் பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரால் நண்பனே கொடூரமாக தாக்கப்பட்ட இச்சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இந்தியாவில் இதயநோய் மரணம் தான் அதிகம்..!! கொரோனாவுக்கு பின் அதிக மாரடைப்பு..!! உயிர் பிழைக்க இதுதான் வழி..!!



