அந்தமானை சேர்ந்த நியாமத் அலி (47) என்பவர் அங்கு ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அவரது நண்பரான மும்தகியூம் (38) என்பவருடன் கூட்டாளியாக சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி, ஹோட்டலுக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்குவதற்காக அந்தமானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் நியாமத் அலி.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள பாரத் பெட்ரோல் பங்க் அருகில் அவர் இறங்கியுள்ளார். பிறகு அவரது ஃபோன் அணைக்கப்பட்டதால் ஏர்லைன்ஸ் விமானச் சேவையில் பணிபுரியும் அவரது மனைவி மந்திப்கவுர் (38) அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்தமான் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
நியாமத் அலி கடைசியாக வண்டலூர் பகுதியில் இருந்ததால், வழக்கு கிளாம்பாக்கம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. கிளாம்பாக்கம் போலீசார் முதலில் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். நியாமத் அலியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, கடைசியாக அவருடன் தொழில் செய்த கூட்டாளியான மும்தகியூம் மீது சந்தேகம் எழுந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்றும், தான் பாண்டிச்சேரி சென்றுவிட்டு அங்கிருந்து விசாகப்பட்டினம் சென்றுவிட்டதாகவும் போலீசாரிடம் கூறித் திசை திருப்ப முயன்றுள்ளார்.
எனினும், சந்தேகம் தீராத போலீசார் மும்தகியூமின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, வண்டலூர் மற்றும் பொத்தேரியில் உள்ள கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்களுடன் மும்தகியூம் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மும்தகியூமின் தூரத்து உறவினரும் கல்லூரி மாணவருமான முகமத் அயான் (19) என்பவரைப் பிடித்துத் தீவிரமாக விசாரித்தனர்.
இதற்கிடையே, முகமத் அயான் மற்றும் மும்தகியூம் இருவரும் பாண்டிச்சேரி மற்றும் விசாகப்பட்டினத்தில் சுற்றித் திரிந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. மேலும், பாண்டிச்சேரி ஏடிஎம்மில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் போலியான செல்போன் எண்கள் மூலம் இந்த கொலைச் சதித்திட்டத்தைத் தீட்டியதும், அந்த எண்களை வேறு ஒருவருடன் கொடுத்து அனுப்பியதும் அம்பலமானது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், தொழில் போட்டி காரணமாக நியாமத் அலியைக் கொல்ல திட்டமிட்டது தெரிய வந்தது. மும்தகியூம் உட்பட 5 பேர் கொண்ட கும்பல், நியாமத் அலியை வண்டலூரிலிருந்து காஞ்சிபுரத்திற்குக் காரில் கடத்திச் சென்று கொலை செய்துள்ளது. பிறகு, அலியின் சடலத்தை ஒடிசா மாநிலத்துக்குக் கொண்டு சென்று வீசியுள்ளனர். இதையடுத்து, கிளாம்பாக்கம் போலீசார் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக, மும்தகியூம் (38), கல்லூரி மாணவர்கள் முகமத் அயான் (19), மற்றும் சுப்யான் (19) ஆகிய மூன்று பேரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.