சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வயதான அமெரிக்கர்கள் மத்தியில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீதான போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை காட்டுகின்றன. அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்தப் பழக்கம் மது மற்றும் புகையிலை போதைப் பழக்கத்தை விடவும் அதிகமாக பரவியுள்ளது. இது கட்டாய உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் தீவிரமான மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, கொழுப்பு, உப்பு மற்றும் செயற்கை சேர்க்கைகள் நிறைந்த இந்த அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், மூளையின் பாதைகளை தூண்டி, அவற்றை மீண்டும் மீண்டும் கட்டாயமாகச் சாப்பிடத் தூண்டுகின்றன. ஆய்வின்படி, 50 முதல் 80 வயதுக்குட்பட்ட பெரியவர்களில் சுமார் 12% பேர் இந்த உணவுகளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெண்கள் இதில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
50 – 64 வயதுடைய பெண்களில் கிட்டத்தட்ட 18% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 – 80 வயதுடைய பெண்களில் 12% பேர் இந்த போதைப் பழக்கத்தை எதிர்கொள்கின்றனர். ஆண்களில் இதன் பரவல் வெறும் 7.5% மட்டுமே உள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் சந்தைப்படுத்தல் மற்றும் சமூக பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், அதிக பாதிப்பை எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அளவுக்கு அதிகமாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு, இதயப் பிரச்சனைகள் போன்ற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இவற்றைத் தவிர, மனநலத்தில் மாற்றம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் குறைந்த சமூக ஈடுபாடு போன்ற மனநலப் பிரச்சினைகளும் கவனிக்கப்படுகின்றன. உடனடித் திருப்தியை வழங்கும் இந்த உணவுகள், மூளையின் மைய நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, கட்டாய உணவுப் பழக்கத்தை உருவாக்குகின்றன.
தீர்வு என்ன..?
இந்த பழக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க, நிபுணர்கள் உணவு தரத்தை மேம்படுத்தவும், அதிக பதப்படுத்தப்பட்ட உணவின் உட்கொள்ளலைக் குறைக்கவும், ஊட்டச்சத்து நிறைந்த மாற்றுத் தேர்வுகளை ஊக்குவிக்கவும் பரிந்துரைக்கின்றனர். பெரியவர்களுக்கு மனநல ஆதரவு, ஊட்டச்சத்து வழிகாட்டுதல் மற்றும் உணவு லேபிள்களைப் படிக்கும் விழிப்புணர்வு ஆகியவை மிக அவசியம்.



