கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது..
ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.. மேலும் தனது வீடியோவில் அவர் வருத்தம் தெரிவிக்காததும், மன்னிப்பு கேட்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமின்றி “ சி.எம்.சார் என்ன பழிவாங்கணும்னா என்ன எது வேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று கூறியிருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சு சினிமா டயலாக் மாதிரி இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்..
இதனிடையே தவெகவின் துணை பொதுச்செயலாளரான ராஜ் மோகனும் தனது ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவானதாக தகவல் வெளியானது.. இதுகுறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது 11 நாட்களுக்கு பின் கரூர் துயரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி. இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.