தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும்போதெல்லாம், அவர்களை எல்லைத்தாண்டி வந்ததாக கூறி கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்வது இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரே இரவில் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (அக்.8) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இவர்கள் நெடுந்தீவுக்கு அருகே இந்தியக் கடல் எல்லையை ஒட்டியுள்ள நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு இரண்டு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றிவளைத்து, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
பின்னர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 47 மீனவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களின் 5 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். மேலும், இந்த விசைப்படகுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 47 மீனவர்களும் உடனடியாக இலங்கை கடற்படையினரின் கப்பல் மூலம் காங்கேசன் துறைமுகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்ட 47 மீனவர்கள் மற்றும் 5 படகுகளையும் விடுவிக்க வேண்டுமென ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் உறுதியான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தொடர்ந்து அத்துமீறி வரும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மீனவர்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.
Read More : கூட்டத்தில் பறந்த கொடி.. கூட்டணிக்கு பிள்ளையார் சுழி..!! எடப்பாடியுடன் இணையும் விஜய்..!!