கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரு காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை நேரத்தில் ஓசூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மீது ‘பிக்கப்’ வேன் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக சாலையில் சிறிது குழப்பம் ஏற்பட்ட நிலையில், அதே சமயம் அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, ஏற்கனவே விபத்தில் சிக்கியிருந்த வாகனங்கள் மீது மீண்டும் மோதியது.
இந்த தொடர் விபத்தில், பிக்கப் வேனுக்கும், சரக்கு லாரிக்கும் இடையே ஒரு கார் சிக்கி, அப்பளம்போல் நொறுங்கியது. காரின் முன்பகுதி மற்றும் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற 3 பேர் யார், அவர்கள் குறித்த முழு விவரங்கள் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கோர விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டுநர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த தொடர் விபத்து, நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதுடன், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.