கோவை மாவட்டம் சூலூரை அடுத்த சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 24 வயதான சந்தோஷ், சூலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு முன்பு இவருக்கும், தேவி என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஜாதகம் பொருந்தாத காரணத்தினால், இருவரின் வீட்டாரும் வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். தேவி கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (26) என்பவரைத் திருமணம் செய்துகொண்டு சூலூர் கரடிவாவியில் வசித்து வந்தார்.
திருமணமாகி 2 ஆண்டுகளுக்குப் பிறகும், சந்தோஷும் தேவியும் இன்ஸ்டாகிராம் மூலமாக மீண்டும் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தேவியின் கணவர் ரவிச்சந்திரனுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அவர் சந்தோஷைச் சந்தித்து, தன் மனைவியுடனான பழக்கத்தைக் கைவிடுமாறு கடுமையாக எச்சரித்தார். எனினும், அவர்கள் இருவரும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசுவதைத் தொடர்ந்தனர். இது ரவிச்சந்திரனுக்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தவே, சந்தோஷை கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில் , சந்தோஷ் இரவில் வழக்கம்போல் பெட்ரோல் பங்க் பணியில் இருந்தபோது, ரவிச்சந்திரன் தனது உறவினரான நவீன் என்பவருடன் அங்கு வந்தார். இருவரும் சந்தோஷிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் கழுத்தில் குத்தியதுடன், இரும்பு கம்பியாலும் தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சூலூர் இன்ஸ்பெக்டர் செல்வராகவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சந்தோஷின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெட்ரோல் பங்க்கில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரவிச்சந்திரன் மற்றும் நவீனை தேடி வந்தனர். சூலூர் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கைதான ரவிச்சந்திரன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், “சந்தோஷ் என் மனைவியுடன் திருமணத்திற்குப் பின்னரும் தொடர்பில் இருந்தார். சமீபத்தில் எனது மனைவி திடீரென மாயமானார். பின்னர், சந்தோஷ் தான் என் மனைவியை அழைத்துச் சென்று, 4 நாட்கள் கழித்து மீண்டும் கொண்டு வந்து விட்டது தெரியவந்தது. இதனால் எனக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். என் குடும்பம் பிரிவதற்குக் காரணம் சந்தோஷ் தான் என்று ஆத்திரம் ஏற்பட்டதால், அவரை தீர்த்து கட்டினேன்” என்று அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். கள்ளத்தொடர்பு விவகாரம் காரணமாக நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.