பெண்களின் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய திட்டமே ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ (Sukanya Samriddhi Yojana) ஆகும். பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* பெண் குழந்தை 10 வயதுக்குள் இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் திட்டத்தைத் தொடங்கலாம். 10 வயதைத் தாண்டிய பிறகு குழந்தை பெயரில் கணக்கை மாற்றலாம்.
* 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
* இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
* வரி விலக்கு: வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் வரி விலக்கு கிடைக்கும். இது நீண்டகால சேமிப்புக்கு மிகுந்த நன்மையை வழங்கும் திட்டமாகும்.
சிறப்பு நிபந்தனைகள்: பெண் குழந்தையின் உயர்கல்வி அல்லது திருமணத்திற்காக தேவையானால், சேமித்த தொகையின் 50 சதவிகிதம் வரை இடைநிலையில் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டி வருமானத்திற்கும் எந்தவித வரி கட்டணம் இல்லை என்பது கூடுதல் பலனாகும். அருகிலுள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் எளிதாக இந்த கணக்கைத் தொடங்கலாம். பெண் குழந்தையின் திருமணம் நடக்கும் வரையிலும் பணம் செலுத்தலாம்.



