கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது. கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த முறை விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அதன்படி உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தனர். சுமார் 18 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற விண்னப்பித்த நிலையில், தகுதியான பயனர்களுக்கு தீபாவளியையொட்டி இம்மாதம் ரூ.1000 வரவு வைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அரசு தரப்பில் இன்னும் இரண்டும் மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் தீபாவளிக்கு பணம் கிடைக்கும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.