சென்னையின் அண்ணா நகரில், நேற்று இரவு மதுபோதையில் காரை ஓட்டிய கொளத்தூரைச் சேர்ந்த இளைஞரால் அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
கொளத்தூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தனது பெண் தோழியுடன் அண்ணா நகர் பகுதியில் உள்ள காரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிபோதை தலைக்கேறிய நிலையில், அவர் காரை ஓட்ட தொடங்கியுள்ளார். அப்போது, பின்புறத்தைக் கவனிக்காமல் பிரசாந்த் காரை ரிவர்ஸில் (பின்நோக்கி) எடுத்தபோது, அவருக்குப் பின்னால் வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது.
இதனால் நிலைதடுமாறிய இரண்டாவது காரின் மீது, அதற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த மூன்றாவது காரும் மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்தின் தீவிரத்தைக் கருதி அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நல்ல வேளையாக, இந்தத் தொடர் விபத்தில் சிக்கிய மூன்று கார்களிலும் பயணித்தவர்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையிலேயே, காரை ஓட்டிய பிரசாந்த் மதுபோதையில் இருந்தது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, குடிபோதையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரசாந்த் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன், விபத்துக்குள்ளான அவரது காரையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து மேலும் விரிவான விசாரணையை அண்ணாநகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : “சினிமாவுல வந்த பணம் அரசியல்ல வரல”..!! மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் நடிகர் சுரேஷ் கோபி..!!