தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2.04 மணி அளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏடிஆர் சிறிய ரக பயணிகள் விமானம் 62 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 67 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையை நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் சிறிதளவு லேசான விரிசல் ஒன்று விழுந்துள்ளது.
இதை பார்த்த விமானி அதிர்ச்சி அடைந்து உடனடியாக இந்த தகவலை சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை பத்திரமாக சென்னையில் தரையிறக்க உத்தரவிட்டனர்.
மேலும் விமானம் பத்திரமாக தரையிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் செய்தனர். இதையடுத்து அந்த விமானம் தரையிறங்க வேண்டிய நேரத்தை விட முன்கூட்டியே 8 நிமிடங்கள் முன்னதாக 03.27 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதன் பிறகு அந்த விமானம் ரிமோட் பே எனப்படும் விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான கார்கோ விமானங்கள் நிற்கும் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனால் விமானத்தில் பயணிகள் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்தது. பிறகு பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறக்கி பேருந்துகள் மூலம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பயணிகளுடன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் லேசான விரிசல் ஏற்பட்ட நிலையில் விமானி பதற்றம் அடையாமல் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக சென்னையில் தரையிறக்கி இருக்கிறார். இதனால் அசம்பாவிதத்தில் சிக்காமல் 67 பேரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்திலும், பயணிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டெல்லியில் உள்ள டிஜிசிஏ எனப்படும், விமான பாதுகாப்பு துறையின் டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் நடுவானில் பறந்த போது இதேப் போல் விமானத்தின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியில் விரிசல்கள் ஏற்பட்டு சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Readmore: ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. 2026-ல் 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு.. தமிழக அரசு அனுமதி!