கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு, தவெக நிர்வாகியும், ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி தலைவருமான மரிய வில்சன் நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும், காவல்துறை தரப்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், தவெக மற்றும் அரசு தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில் கடந்த 15 நாட்களாக தலைமுறைவாக இருந்த தமிழக வெற்றிக்கழகம் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் வெளியே வந்தார். நேற்று இரவு விஜயை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அதனைதொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு, நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் அறிவித்தபடி, கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டான பலன் சென்று சேரவேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறேன். அக்குழு நாளை அவர்களை சந்திக்கிறது. ஏற்கனவே நான் அறிவித்தபடி, கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும், ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி 5,000/- ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்/தலைவியின் வாழ்நாள் முழுக்க வழங்க இருக்கிறேன்.
நாளைமுதல் என் குழு செயற்பாட்டை ஆரம்பிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என மரிய வில்சன் தெரிவித்துள்ளார். முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என, அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Read more: பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பது எப்படி?. சரியான முறை எது?. மருத்துவர் அட்வைஸ்!