மேற்கு வங்கத்தில் 48 வயதான அரபிந்து என்பவர் இரண்டு யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். திரைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை பதிவேற்று வந்த இவரது சேனல்களுக்குப் பெருமளவிலான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அரபிந்தும் அவரது மகனும் இணைந்து ரீல்ஸ் மோகத்தில் இருந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன், பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.
ரீல்ஸ் படப்பிடிப்புக்காகப் பல்வேறு இடங்களுக்குச் சிறுமியை அழைத்துச் சென்ற தந்தை-மகன் இருவரும், சிறுமி உடை மாற்றும்போது அதனை ரகசியமாக படம்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, தொடர்ச்சியாக அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், அரபிந்துவின் மகன் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குங்குமம் வைத்த பின்னரும் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான். அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சிறுமியின் தந்தை கொல்கத்தாவில் பணியாற்றும் ஒரு காவலர் ஆவார். மேலும், குற்றவாளி அரபிந்துவுக்கு இச்சிறுமியின் குடும்பத்தை ஏற்கனவே தெரியுமாம்.
இந்த அக்கிரமங்கள் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, ஹரோவா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல்துறையினர், அரபிந்து மற்றும் அவரது மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அரபிந்துவிடமிருந்து செல்போன்கள், கேமராக்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பசிர்ஹாட் துணைப்பிரிவு நீதிமன்றம் அரபிந்துவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்துள்ளதுடன், அவரது மகனைச் சிறார் குற்றவாளிகள் இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர், இந்தக் கொடூரச் செயலுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.