பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் திறம்பட செயல்பட்டு வருவது செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் பணம் செலுத்தி, 21 ஆண்டுகளில் மெச்சூரிட்டி பணம் பெறலாம். கல்வி, தொழில், திருமணம் போன்ற தேவைகளுக்கு பயன்படும் இத்திட்டத்தின் வட்டி விகிதம் சமீபத்தில் 7.6% இலிருந்து 8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
10 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த கணக்கைத் தொடங்க முடியும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கே திறக்கலாம்; ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கே அனுமதி உண்டு. இதனுடன் இணையாக, மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டமும் (Mahila Samman Savings Certificate) மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் எவரும், வயது வரம்பின்றி இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயதுக்குள் உள்ள சிறுமிகள் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் கணக்கைத் தொடங்கலாம்.
இது ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும், இதில் முதலீடு செய்யும் பெண்கள் இரண்டு வருடங்கள் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ 2 லட்சம் ஆகும். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீட்டிற்கு 7.5 சதவிகிதம் வலுவான வட்டி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரிவிலக்கின் பலனும் அதில் முதலீடு செய்தால் கிடைக்கும்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் (MSSC) பெறப்பட்ட வட்டியைக் கணக்கிட்டுப் பார்த்தால், இந்தத் திட்டத்தின் கீழ், 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் இரண்டு வருட முதலீட்டுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். முதல் ஆண்டில் பெறுவது ரூ. 15,000 ஆகும். நிலையான வட்டி விகிதத்தில் அடுத்த ஆண்டில் மொத்தத் தொகைக்கு பெறப்பட்ட வட்டி ரூ.16,125 ஆகும். அதாவது, இரண்டு ஆண்டுகளில் வெறும் ரூ.2 லட்சம் முதலீட்டில், மொத்த வருமானம் ரூ.31,125 ஆகிறது. பெண்களுக்கு இது ஒரு சிறந்த திட்டம்.



