தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.. அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க தொடங்கினார்.. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதலில் பேச அனுமதி வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர்.. முதலமைச்சர் பேசிய பிறகு அனைவருக்கும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் தெரிவித்தார்..
இதை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் “ கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.. உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. 27.09.2025 அன்று தமிழக வெற்றிக் கழக தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது.. அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் இதற்காக பல்வேறு இடங்களில் அனுமதி கோரினார்.. ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அவர் கேட்ட இடங்களுக்கு அனுமதி வழங்கவில்லை..
வேலுச்சாமிபுரத்தில் 27.05.2025 அன்று அக்கட்சியின் தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அனுமதி கோரினார்.. அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.. 515 காவலர்கள் கரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.. வெளி மாவட்டத்தில் இருந்து 91 காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.. பாதுகாப்பு பணியில் காவலர்கள், அதிகாரிகள் என மொத்தம் 606 ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காவல்துறையை பொறுத்தவரை வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10,000 பேர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை விட கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அனுமதி கோரிய கடிதத்தில் மாலை 3 முதல் இரவு 10 மணி என குறிப்பிட்டிருந்தார்.. ஆனால் செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சி தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியினர் பொதுச்செயலாளர் அறிவித்திருந்தார்.. இதனால் காலை முதலே மக்கள் வரத் தொடங்கிவிட்டனர்..
27.09.2025 அன்று அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு 9.25 திருச்சி வந்தடைந்தார்.. பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இரவு 7 மணிக்கு கரூர் வந்துள்ளார். அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து 7 மணி நேரம் கழித்து தான் வந்தார்.
இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்தது.. இங்கு அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இருக்கிறீர்கள்.. கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.. அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை.. காலை முதல் கரூரில் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை.. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் செய்யப்படவில்லை..
இயற்கை உபாதை கழிக்க பெண்களால் வெளியே செல்ல முடியவில்லை.. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு முன்பு 25.09.2025 அன்று எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொண்ட பரப்புரை நிகழ்ச்சி நடந்துள்ளது.. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர்.. எந்த வித அசம்பாவிதம் இல்லாமல் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.. அந்த கூட்டத்தில் சுமார் 12,000 முதல் 15,000 பேர் பங்கேற்றனர்.. அந்த பரப்புரை கூட்டத்திற்கு சுமார் 130 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த கட்சியின் நிகழ்ச்சி நடந்துள்ளது.
கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடி நிகழ்ச்சிக்கு பின் பெருவாரியான ரசிகர்களும் கட்சியினரும் கேரவன் வாகனத்தை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தனர்.. பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரச்சார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரச்சார வாகனத்தில் இருந்து ஏற்பாட்டாளர்களை அக்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்தி, கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார்..
அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் பேசுவோம் என்று பிடிவாதமாக தொடர்ந்து சென்றனர்.. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியின் இணை பொதுச்செயலாளரை பலமுறை தொடர்பு கொண்டு பிரச்சார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.. காவல்துறையின் வழிமுறைகளை மீறி வாகனம் தொடர்ந்து சென்ற போது, கூட்டத்தில் பல இடங்களில் அலை மோதல் ஏற்பட்டது.. கூட்டத்தில் இருந்தவர்களிடையே நெரிசல் ஏற்பட்டு மயக்கம், பீதி ஏற்பட்டது.. இதனால் பலர் கீழே விழுந்து மிதிப்பட்டிருக்கிறார்கள்.. கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து கொட்டகையை அகற்றி வெளியேற முயற்சி செய்தனர். இதனால் மின்சாரம் தாக்குதவதை தடுக்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்துள்ளார். கூட்ட நெரிசலால் காயமடைந்தும், மயக்கமடைந்தவர்களை கவனித்த உடன் காவல்துறையின் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்களை வரவழைத்துள்ளனர். இவ்வாறு கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின் அவர்களை காப்பாற்ற தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர நெரிசல் எற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் வரவில்லை..
காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால் அப்போது தவெக கட்சியினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதால் மீட்புப் பணி தடை பட்டது. இதுதொடர்பாக கரூர் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கரூரில் தவெக கட்சியின் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறிந்த உடன் தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கரூருக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை.. அதனால் தான் அன்றிரவே நானும் கரூருக்கு சென்றேன். அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன.. அமைச்சர்கள் பலரும் அங்கே சென்றனர்..
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் இரவு 7.47 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. தொடர்ச்சியாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர்.. அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வரவரழைக்கப்பட்டனர்..
இந்த சம்பவத்தில் சிகிச்சை பெற்ற அனைவரும் வீடு திரும்பி உள்ளனர்.. ஒருவர் மட்டும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அன்றிரவே மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.. 24 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூராய்வு செய்யப்பட்டது.. துயரமான இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கபப்ட்டது. 03.10.2525 அன்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இந்த சம்பவத்தை சட்டப்படி விரைந்து கையாண்டது..
இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது.. இதனிடையே உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது..
எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன்.. நடத்தியும் இருக்கிறேன்.. இங்குள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள் தான்.. மாநாடுகள், அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்தும் போது அதற்குரிய சட்டதிட்டங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.. கட்டுப்பாட்டை மீறும் போது பாதிக்கப்பட்டுவது கட்சியின் தொண்டர்கள் தான்.. பொதுமக்கள் தான்..
உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.. இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று உறுதியளிக்கிறேன்.. இது போன்ற துயர சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் எடுக்க வேண்டும்.. அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம்..” என்று தெரிவித்தார்..



