தமிழக அரசு துறைகளில் அதிக லஞ்ச புகார்கள் பதிவாகும் துறை என்றால் அது வருவாய்த் துறையே என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. நிலத்தை அளப்பதும், பட்டா வழங்குவதும் அதிகாரிகளின் கடமையாக இருந்தாலும் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலைமை பல இடங்களில் தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் நேரடியாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, தனி பட்டா (Individual Patta) கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கூட்டு பட்டா (Joint Patta) வழங்கப்படுவதாக புதிய புகார் கிளம்பியுள்ளது. கூட்டு பட்டா என்பது ஒரே நிலத்தில் பலரின் பெயர் சேர்த்து வழங்கப்படும் ஆவணம். ஆனால் ஒருவருக்கான உரிமை மட்டும் தனித்தனியாக காட்டப்படும் ஆவணமே தனி பட்டா ஆகும். இதைப் பெற, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம், நில வரைபடம், விற்பனைச் சான்று, வரி ரசீது போன்ற பல ஆவணங்கள் தேவைப்படுகிறது.
பட்டா பெற தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்த பிறகும், சில அதிகாரிகள் லஞ்சம் கேட்டுவிடுவதாக ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன. சிலர் இதை சகித்துக் கொள்ளாமல், நேரடியாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைத்து புகார் அளித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் சில அதிகாரிகள் சமீபத்தில் பொதுவெளியிலேயே கைது செய்யப்பட்டனர்.
வீடு அல்லது மனை வாங்கியவர்கள் தங்கள் பெயரில் தனிப்பட்டா கோரி விண்ணப்பித்தபோது, சில அலுவலகங்களில் கூட்டு பட்டா தந்துவிட்டதாகவும், அதைப் பற்றி விசாரித்தால் “மீண்டும் விண்ணப்பியுங்கள்” என கூறப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பலர் மாதங்கள் கடந்தும் பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள், “இனி இதுபோன்ற புகார்கள் வந்தால் உரிய விவரங்களுடன் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். தனியார் வழியாக நில அளவை செய்து, பட்டா வழங்குவதற்கான வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. தாசில்தார்களும் இதுகுறித்து மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
Read more: “ தவெக உடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் எந்த பயனும் இல்லை..” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!



