நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் மெய்நிகர் அமர்வில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் வீடியோ மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, வழக்கறிஞர்களின் ஒழுக்கம் மற்றும் தொழில்முறைக் கண்ணியம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆன்லைன் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு சற்று முன்னதாகப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நீதிபதி இன்னும் அமர்வை தொடங்கவில்லை, பங்கேற்பாளர்கள் அவருக்காகக் காத்திருந்த நிலையில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த வீடியோ காட்சிகளில், வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற உடையில் தனது அறையில் அமர்ந்திருப்பது தெரிகிறது. அவருக்கு முன்னால் சேலை அணிந்த ஒரு பெண் நின்றிருக்கிறார். சில நொடிகளிலேயே, அந்த வழக்கறிஞர் அப்பெண்ணின் கையைப் பிடித்துத் தன்னருகே இழுத்து முத்தமிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அப்போது அந்தப் பெண் வெளிப்படையாகத் தயங்குவது போலவும், எதிர்ப்பைத் தெரிவிப்பது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன. உடனடியாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் புனிதத் தளமாகப் பார்க்கப்படும் நீதிமன்ற அமர்வின் முன்பாக, பொதுவெளியில் இத்தகைய அநாகரிகமான நடத்தை இருப்பது நீதிமன்றத்தின் மாண்பைக் களங்கப்படுத்துவதாகப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அந்த வழக்கறிஞர் மீது உடனடியாக உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீதித்துறையின் மரியாதையைக் காக்கும் பொருட்டு, இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



