திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் தனியார் ஹோட்டலில் இதய நோய் தொடர்பான மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME) நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மூத்த மருத்துவர்கள், இதய நோய் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் காதர், ”தமிழ்நாட்டை மட்டுமின்றி உலக அளவில் கடந்த சில மாதங்களாக இதய கோளாறுகள் பிரச்சனை ஏற்பட்டு மரணங்கள் நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் சிறிய வயது முதல் முதியோர் வரையான பலருக்கும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சரியான முறையில் தூக்கம் இல்லாமல் இருப்பது, மன அழுத்தம், சரியான முறையில் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளாதது தான் முக்கிய காரணமாக தெரிகிறது.
ஆகையால், இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடுவதற்கு மனிதர்கள் தேவையற்ற சிந்தனையை தவிர்க்கவும் மன உளைச்சலை தவிர்க்கவும் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்யும்போது அங்கு விற்கக்கூடிய பவுடர்களை மருத்துவர்கள் ஆலோசனையை இல்லாமல் உண்ணக்கூடாது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி செய்வது அவசியம் தான்.
ஆனால், அதை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் உடனடியாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சிலர் புரோட்டின் பவுடர்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது மரணம் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக அமைகிறது” என கூறினார்.