கல்லீரல் என்பது மனித உடலில் அத்தியாவசியமான மற்றும் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். நமது அன்றாடப் பழக்கவழக்கங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். எனினும், சரியான உணவு முறைகளையும், சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் பின்பற்றுவதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குறிப்பாக, கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில காய்கறிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
கொழுப்பு கல்லீரல் நோய் என்பது பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் (Insulin Resistance) மற்றும் ஒட்டுமொத்த உணவின் தரத்துடன் தொடர்புடையது. இந்த நிலையில், நார்ச்சத்து நிறைந்த, மாவுச்சத்து அல்லாத காய்கறிகளை உணவில் சேர்ப்பது மிக அவசியம். இத்தகைய உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையை நிர்வகிக்க உதவுவதுடன், கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களையும் வழங்குகின்றன. எந்தவித மருந்துப் பொருட்களின் துணையின்றி, கல்லீரல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள இந்த ஆரோக்கியமான உணவு முறை வழிவகுக்கிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய்களைத் தடுக்க உதவும் சில முக்கியக் காய்கறிகளை இங்கே காணலாம்.
சிலுவைக் காய்கறிகள் : ப்ராக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற சிலுவைக் காய்கறிகள் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்டவை. இவற்றில் உள்ள ‘குளுக்கோசைனோலேட்டுகள்’ (Glucosinolates), உடலில் ‘ஐசோதையோசயனேட்டுகளாக’ (Isothiocyanates) மாற்றப்படுகின்றன. இந்தக் கலவைகள், கல்லீரலில் கொழுப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வளர்சிதை மாற்ற (Metabolism) விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த காய்கறிகளைக் குறைந்த எண்ணெயில் வறுத்தோ, பொரியல் செய்தோ அல்லது ஆவியில் வேகவைத்து சூப்பாகவோ அருந்தலாம்.
பச்சை இலை காய்கறிகள் : பச்சை இலைக் காய்கறிகள் நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் பாலிபீனால்கள் ஆகியவற்றின் களஞ்சியமாகும். குறிப்பாக, கீரைகள் கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுக்கத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. கீரைகளைக் கூட்டு, பொரியல், பருப்புக் கடைசல், ஆம்லெட் அல்லது பராத்தா போன்ற வடிவங்களில் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
பீட்ரூட் : பீட்ரூட்டில் உள்ள ‘பீட்டாலைன்கள்’ (Betalains), ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் உணவு நைட்ரேட்டுகள் கல்லீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன. மேலும், இது கல்லீரலில் சேரும் கொழுப்பைக் குறைக்கும் செயல்முறையைத் தூண்டுகிறது. பீட்ரூட்டை எலுமிச்சையுடன் சேர்த்து சாலட் ஆகச் சாப்பிடலாம். அல்லது பீட்ரூட், கேரட், முட்டைகோஸ் ஆகிய மூன்றையும் பொரியல் செய்து உண்பதும் கல்லீரலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.
Read More : பெரும் சோகம்..!! உயிரை பறித்த ஒற்றை கல்..!! சாலை விபத்தில் தமிழ் சினிமா துணை நடிகர் மரணம்..!!