ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன்களில், ஒரே நாளில் ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருவது வழக்கம். இத்தகைய பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிகப் பயணத்தில் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்யும் நோக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான சபரிமலை சீசனுக்காக, இரண்டு முக்கியமான இன்சூரன்ஸ் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை
விபத்து இன்சூரன்ஸ் திட்டம்: விபத்தில் உயிரிழக்கும் ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வரை நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இயற்கை மரணம் நிவாரணம்: மாரடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.
இந்த இரு திட்டங்களும் பொது நிவாரண நிதி மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பொதுமக்களும், பக்தர்களும் தாராளமாக நன்கொடைகள் வழங்கி பங்கேற்கலாம் என போர்டு தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த பக்தர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பையும் தேவசம் போர்டே மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிகப் பயணம் என்பது பக்தியின் உச்சம் என்றாலும், அதில் ஏற்படும் அபாயங்களை அரசும், நிர்வாகமும் கவனிக்க வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் தேவசம் போர்டின் இந்த முடிவு மனிதாபிமானத்தையும், சமூகப் பொறுப்பையும் வெளிப்படுத்துகிறது. இது பிற மாநிலங்களிலும், பிற யாத்திரை மையங்களிலும் பின்பற்றக்கூடிய சிறந்த முன்மாதிரியாகும்.



