80 மற்றும் 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை நளினி. வெள்ளித்திரையில் புகழின் உச்சியில் இருந்த சமயத்தில், ‘மக்கள் நாயகன்’ என்று கொண்டாடப்பட்ட நடிகர் ராமராஜனை இவர் திடீரென திருமணம் செய்துகொண்டது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது.
சுமார் 13 ஆண்டுகள் நல்லபடியாக நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை, கருத்து வேறுபாடு காரணமாக 2000-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில், நளினி தனது பிரிவுக்கு காரணம் என்ன என்பதை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். நளினியும், நடிகர் ராமராஜனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 13 ஆண்டுகள் இவர்கள் இல்லற வாழ்க்கை நீடித்தாலும், பிரிவுக்கான காரணம் ஜாதக ரீதியிலானது என்று நளினி தெரிவித்துள்ளார்.
“நல்லபடியாக சென்ற எங்க வாழ்க்கையில நாங்க பிரிஞ்சதுக்குக் காரணம் ஜாதகம் தான். அவருக்கு (ராமராஜனுக்கு) ஜோதிடத்தில் நல்ல ஈடுபாடு இருந்தது. அவர் அடிக்கடி, ‘நாம பிரிஞ்சிடுவோம்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்” என்று நளினி கூறியுள்ளார்.
மேலும், “கல்யாணம் ஆன கொஞ்ச வருடங்களிலேயே, ‘நாம நாலு, அஞ்சு வருஷத்துல பிரிஞ்சிடுவோம்’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனாலும் எப்படியோ ரப்பர் போல இழுத்து 13 ஆண்டுகள் வரை எங்களது வாழ்க்கையைக் கொண்டு வந்துவிட்டோம்” என்று நளினி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இதைத் தவிர்த்து, ராமராஜன் தன்னைத் திருமணம் செய்ததற்கான மற்றொரு காரணத்தையும் நளினி வெளிப்படுத்தியுள்ளார். “உன்னைத் திருமணம் செய்துகொண்டதால்தான் என் வாழ்க்கை நன்றாக இருந்தது. அதேபோல, திருமணத்திற்கு எம்.ஜி.ஆர். வருவார் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் உன்னை திருமணம் செய்துகொண்டேன் என்றும் அவர் (ராமராஜன்) என்னிடம் கூறியிருக்கிறார்” என நளினி தெரிவித்துள்ளார்.
ஜாதக ரீதியிலான முரண்பாடுதான் பிரிவுக்குக் காரணம் என்று நளினி கூறியிருக்கும் இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்துடன் கலந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபலமான ஜோடிகளில் ஒருவரான நளினி – ராமராஜனின் விவாகரத்து கதை, பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.



