அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது..
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. ஆனால் பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.. கேரளா – கர்நாடகா இடையே இன்று காலை உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது..
இதனிடையே இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான – கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read More : பெரியார் உலகம் – திமுக எம்.பி, எம்.எல்.ஏக்களின் 1 மாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!



