கந்த சஷ்டி விரதம்..!! முருகப் பெருமானின் அறுபடை வீடு..!! எங்கு விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்..?

Murugan 2025

முருகப் பெருமானின் அருளைப் பெற முருக பக்தர்கள் அனைவரும் மேற்கொள்ளும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று கந்த சஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்தில் முருகனை நினைத்துத் தவமிருந்து வேண்டிக்கொள்ளும் இந்த விரதத்தின் மூலம் பக்தர்கள் பல்வேறு விதமான வேண்டுதல்களையும், பலன்களையும் அடைகின்றனர். குறிப்பாக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் கிடைக்கும் சிறப்பான பலன்கள் குறித்து அறியலாம்.


திருப்பரங்குன்றம் (முதல் படைவீடு) : இது முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்த தலம். இங்கு சுப்பிரமணிய சுவாமியாக, தெய்வானையுடன் காட்சி தரும் முருகனை மனமுருகி வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் நல்ல திருமண வாழ்க்கை அமையும் என்று நம்பப்படுகிறது.

திருச்செந்தூர் (இரண்டாம் படைவீடு) : சூரபத்மனை வதம் செய்து வெற்றி பெற்ற பிறகு முருகப் பெருமான் எழுந்தருளிய இடம் திருச்செந்தூர். இங்கு சுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கும் முருகனை வழிபடுவதுடன், இங்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியைப் பெறுவதன் மூலம் தீராத நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். கந்த சஷ்டி நாளில் இந்தப் படைவீட்டில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.

பழநி (மூன்றாம் படைவீடு) : ஞானப்பழத்துக்காக தனது பெற்றோர் மீது கோபம் கொண்டு, ஆயுதம் ஏதுமின்றி கோவணத்துடன் ஆண்டியாக வந்து நின்ற தலம் பழநி மலை. இங்கு தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கும் முருகப் பெருமானை வணங்குவதால் சகல தோஷங்களும் நீங்கி, ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

சுவாமிமலை (நான்காம் படைவீடு) : தந்தையான சிவபெருமானுக்கே பிரணவ மந்திரத்தை உபதேசித்த ஸ்தலம் சுவாமிமலை. இங்குள்ள சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் மனம் உருகி வேண்டினால், கல்வி, ஞானம் ஆகியவை பெருகும்; அத்துடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சியும் சிறக்கும்.

திருத்தணி (ஐந்தாம் படைவீடு) : முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்த ஸ்தலம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு வந்து முருகனை வழிபட்டால், திருமணப் பாக்கியம், குழந்தைப்பேறு ஆகியவை கிடைப்பதுடன், பக்தர்களுக்குத் தீர்க்க ஆயுளும் கிடைக்கும்.

பழமுதிர்சோலை (ஆறாம் படைவீடு) : எளியோரைத் தாழ்வாக நினைப்பது தவறு என்று ஔவைக்கு முருகன் உணர்த்திய தலம் இது. ஞானத்தின் ஸ்தலமாக விளங்கும் சோலைமலை முருகன் கோவிலில் வழிபடுவது கல்வி மற்றும் ஞானம் பெருக வழிவகுக்கும்.

ஆகவே, கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள், இந்த அறுபடை வீடுகளின் தனிச்சிறப்பையும், அங்குள்ள மூர்த்தியை வணங்குவதால் கிடைக்கும் பலன்களையும் அறிந்து விரதம் மேற்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.

Read More : உலகளவில் பிரபலமடைந்த இந்தியாவின் ஆதார் அம்சம்!. இங்கிலாந்தில் ‘பிரிட் கார்டு’ அறிமுகம்!. பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாராட்டு!.

CHELLA

Next Post

வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Mon Oct 20 , 2025
திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் […]
Cyclone 2025

You May Like