கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. கிராமப் பஞ்சாயத்து வாரியாக பெண்கள் அளித்த விண்ணப்பங்களில், தகுதியுள்ள பயனாளிகளை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியின் முடிவில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் ₹1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு, பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய தீபாவளிப் பரிசாகக் கருதப்படுகிறது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது..?
புதிதாக விண்ணப்பித்தவர்களில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வி பலரது மனதில் எழலாம். ஏற்கெனவே, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களைப் போலவே, புதிய விண்ணப்பதாரர்களுக்கும் மேல்முறையீடு செய்ய அரசு விரைவில் ஒரு வாய்ப்பை வழங்கவுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் முதல் வாரத்திலோ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியிருந்தும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதும் பெண்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவிக்கும்.
நிராகரிப்புக்கான காரணம் என்ன..?
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது, ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதைப் போலவே, புதிய பயனாளிகளுக்கும் தெரிவிக்கப்படும். அந்தக் காரணம் உண்மை இல்லை என விண்ணப்பதாரர் கருதினால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இதற்காக, தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கும்.
அந்தக் காலக்கெடுவுக்குள் தகுதியான பெண்கள் தங்கள் நிராகரிப்புக்கு எதிராக ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பித்து உரிமைத்தொகை திட்டத்தில் சேரலாம். எனவே, தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதே என்று பெண்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. தகுதியுள்ள அனைவரும் திட்டத்தில் இணைவதற்கு அரசு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.



