தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.
இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் (TNPSC Group 2 Mains Result 2023) டிசம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று தற்போது டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மதிப்பீட்டுப் பணிகள் தற்போது முழுமையடையும் நிலையில் இருப்பதாகவும் முடிந்தவுடன் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.