தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) அறிவித்திருந்த இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் 180 காலிப் பணியிடங்கள், மற்றும் தீயணைப்புத் துறையில் 631 தீயணைப்பாளர் பணியிடங்கள் என மொத்தம் 3,644 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
10ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட இந்தப் பணியிடங்களுக்கு 18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.
காவலர் பணியில் சேர விரும்பும் தேர்வர்களுக்காக நவம்பர் 9-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பித்தவர்களுக்குத் தற்போது ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://tnusrb.cr.2025.ucanapply.com/login என்ற இணையதள முகவரிக்குச் சென்று, தங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டில் தேர்வு நடைபெறும் தேதி, மையத்தின் முகவரி, தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வர்கள் விதிகளை நன்கு படித்து, பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் தேர்வு மையத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



