சரும அழகைப் பராமரிப்பதில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது, சமீபகாலமாக பிரபலங்கள் மத்தியில் தொடங்கி பொதுமக்கள் வரை ட்ரெண்டாகி வருகிறது. ஒரு சிறிய ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மசாஜ் (Facial Massage) செய்வது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத் துளைகளைச் சுருக்கி, வீக்கம் மற்றும் சிவந்த புள்ளிகளை குறைக்கிறது.
இதனால் சருமம் மென்மையாகவும், இளமையாகவும் இருக்கும். இந்த எளிய முறை சருமப் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுவதால், இதை எத்தனை முறை பயன்படுத்தலாம், யார் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இங்கே காணலாம்.
ஒரு நாளைக்கு ஒருமுறை போதும் :
ஐஸ் கட்டி மசாஜ் சருமத்திற்குப் பல நன்மைகளை அளித்தாலும், ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது சிறந்தது. ஐஸை அதிகமாகப் பயன்படுத்துவது சில சமயங்களில் சருமத்தை வறட்சி அடைய செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்..?
வறண்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் : உங்களுக்கு மிகவும் வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், முகத்தில் அடிக்கடி ஐஸ் கட்டியைத் தடவுவது எரிச்சல் மற்றும் சிவப்பை ஏற்படுத்தலாம். இத்தகையோர் ஐஸை நேரடியாகத் தடவுவதைத் தவிர்த்து, ஒரு மெல்லிய பருத்தித் துணியில் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யலாம்.
சரும சிகிச்சைகள் : நீங்கள் லேசர் சிகிச்சை, தோல் உரித்தல் அல்லது வேறு ஏதேனும் தீவிரமான அழகு சிகிச்சைகள் செய்திருந்தால், சருமம் இயற்கையாகக் குணமடையும் வரை ஐஸ் மசாஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
கற்றாழை ஐஸ் கட்டிகள் :
சாதாரண நீர்க் கட்டிகளுக்குப் பதிலாக, கற்றாழை ஜெல்லை ஐஸ் டிரேயில் வைத்து உறைய வைத்துப் பயன்படுத்தலாம். கற்றாழை ஐஸ் கட்டிகளை முகத்தில் தடவுவது சருமத்தை இதமாக்கி, வீக்கத்தை குறைக்கும் மற்றும் சரும அமைப்பை மேம்படுத்த உதவும்.
ஐஸ் மசாஜ் செய்ய உகந்த நேரம் :
மேக்-அப் போடுவதற்கு முன் ஐஸ் மசாஜ் செய்வது சிறந்தது. அதேபோல், இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஐசிங் செய்வது சருமத்திற்குப் புத்துணர்ச்சியையும் நிவாரணத்தையும் அளிக்கும். உங்கள் முகத்தில் எரிச்சல் அல்லது சிவப்பைப் போக்க விரும்பினால், ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் ஐஸ் மசாஜ் செய்யுங்கள்; மிக அதிகமாகப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
Read More : பணம் மிச்சம்..!! இனி புது லென்ஸ் வாங்காதீங்க..!! கண் கண்ணாடியின் கீறல்களை மறைக்க எளிய டிப்ஸ் இதோ..!!



