ரூ.9,760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், 2,000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.26 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பியுள்ளதாகவும், சுமார் ரூ.9,760 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட அன்று, ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்த புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு நவம்பர் 30ஆம் தேதியன்று ரூ.9,760 கோடியாகக் குறைந்துள்ளது.” என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாகி போனது போன்று இல்லாமல், ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கு அலுவலகங்களில் மக்கள் ரூ. 2,000 வங்கி நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றலாம். அதேபோல், இந்தியாவில் உள்ள எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்தும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அலுவலகங்களுக்கு இந்திய அஞ்சல் மூலம் ரூ.2000 நோட்டுகளை அனுப்பலாம்.
முன்னதாக, ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அல்லது மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர், காலக்கெடு அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வங்கிக் கிளைகளில் டெபாசிட் மற்றும் பரிமாற்றச் சேவைகள் இரண்டும் அக்டோபர் 7ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டன.
அக்டோபர் 8ஆம் தேதி முதல், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் அதனை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதாவது, அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.