தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையான மனோரமா, 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர வேடங்கள் மற்றும் நகைச்சுவை வேடங்களின் கலவையான மனோரமா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2015 இல் அவர் காலமான பிறகு, திரைத்துறையில் மனோரமாவின் இடம் ஈடுசெய்ய முடியாததாகவே உள்ளது.
இந்த நிலையில் மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி இன்று காலை சுமார் 10:15 மணியளவில் சுவாசக் கோளாறு காரணமாக காலமானார். அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 70. அவரது மரணச் செய்தி தமிழ்த் திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, பலர் சமூக ஊடகங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மனோரமாவின் ஒரே மகன் பூபதி, வாழ்க்கையில் தனக்கென ஒரு பாதையை உருவாக்க முயன்றார். அவரை திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்த மனோரமா பல முயற்சிகளை மேற்கொண்டார். எதிர்பார்த்த வெற்றி இல்லாவிட்டாலும், பூபதி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அவர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் நடித்தார்.
இருப்பினும், அந்த படங்களில் அவருக்கு அதிக கவனம் கிடைக்கவில்லை. பூபதியின் மரணம் திரைப்படத் துறையில் மிகுந்த சோகத்தையும் இரங்கலையும் ஏற்படுத்தியுள்ளது. பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரின் இறுதிச்சடங்கு நாளை மதியம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
முன்னதாக இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.. உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.. அவருக்கு வயது 68. அவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு இசைக்கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
சபேஷ், தேவா மற்றும் முரளி ஆகிய மூவரும் உடன்பிறந்தவர்கள். சபேஷ், தேவா மற்றும் முரளி ஆகியோருடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.. குறிப்பாக சபேஷ், தனது சகோதரர் முரளியுடன் இணைந்து இசையமைத்துள்ளார், மேலும் அவர் தேவா இசையமைத்த படங்களில் பின்னணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இருவரும் இணைந்து இசையமைத்த சில படங்களுக்குப் பிறகு, அவர்கள் “சபேஷ்-முரளி” என்ற பெயரில் தனி இசையமைப்பாளர்களாக அறியப்பட்டனர். ஒரே நாளில் 2 நட்சத்திரங்கள் இறந்துள்ளது கோலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



